10,+2 தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் பென்னாகரம் இடைத்தேர்தலை தள்ளிவைக்க கோரி மக்கள் சக்தி கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளது...
02-03-2010 அன்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி திரு.கோகுலே மற்றும் திரு.தனபால் அவர்கள், தேர்தல் ஆணையம், தேர்தலை மாணவர்களுக்கு தொந்தரவு தராத வகையில் நடத்த உறுதி கூறியிருப்பதால் தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்று மக்கள் சக்தி கட்சியின் மனு தள்ளுபடி செய்தது

பத்திரிக்கை செய்திகள்: 03-03-2010
தினத்தந்தி || தினத்தந்தி 2 || தினமலர் || தினகரன் || தினமணி || தமிழோசை || Times Of India || THE HINDU ||
பத்திரிக்கை செய்திகள்: 02-03-2010
தினமலர் || தினத்தந்தி || மாலை மலர் || மாலை மலர் 2 || மாலை முரசு || தமிழ் முரசு||
பத்திரிக்கை செய்திகள்: 27-02-2010
தினத்தந்தி || தினமலர் || தினகரன் || தினகரன் 1 || தமிழோசை|| மாலை மலர் || தின மதி || THE HINDU || THE HINDU 1 || DECCAN CHRONICLE
||Thats Tamil web News || Koodal .com||
பொது நல வழக்கு தொடர்பான மக்கள் சக்தி கட்சியின் முதல் அறிக்கை :
பொது நல வழக்கு தொடர்பான மக்கள் சக்தி கட்சியின் இரண்டாவது அறிக்கை :
10ம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்கும் சமயத்தில் பென்னாகரம் இரண்டாவது இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி தேர்தலை வேறு தேதிக்கு தள்ளி வைக்க உத்தரவிடக் கோரி, மக்கள் சக்தி கட்சி உயர்நீதிமன்றத்தில் இன்று(26-02-10) பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ( High Court Case filing W.P.No: 4265/2010 Dated: 26-02-2010)
பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த ஜனவரி 20 அன்று நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் சென்ற ஆண்டு டிசம்பர் இறுதியில் தெரிவித்தது. அதாவது தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழர் திருநாளில் நடத்தவேண்டியிருந்திருக்கும். ஆளும் தி.மு.க. கூட்டணி இதற்கு எதிர்ப்பு ஏதும் கூறவில்லையென்றாலும் அந்த குறிப்பிட்ட தொகுதியில் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருக்குமென மற்ற கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டது.
இம்மாதம் 19ம் தேதி , பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் மார்ச் 27ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இம்முறை பண்டிகைகள் ஏதும் இல்லை என்றாலும் தொகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் +2 பொதுத் தேர்வு மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 22 வரை நடக்கவிருக்கிறது. பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, மார்ச் 23ல் தொடங்கி ஏப்ரல் 9 அன்று முடிகிறது.
தேர்தல் மனுத்தாக்கல் மார்ச் 3 ஆம் தேதி அன்று தொடங்கவிருந்தாலும் பிரச்சாரம் என்னவோ கடந்த ஒரு மாத காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த பிரச்சாரமானது மார்ச் தொடங்கியதுமே தீவிரமாகிவிடும். ஒரு வீதிக்கு சராசரியாக 4 தேர்தல் பணிமனைமுக்கிய கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டிருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஏட்டிக்கு போட்டியாக தங்களது தலைவர்களை துதி பாடும் பாடல்களை ஒலிப் பெருக்கியில் அதிகபட்சமான ஒலியில் இயக்கிக்கொண்டிருப்பர்.
ஆளும் தி.மு.க. சார்பில் அனைத்து அமைச்சர்கள் உட்பட அனைத்து தி.மு.க. தொண்டர்களும் பென்னாகரம் தொகுதிக்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும் என அதன் தலைவர் கருணாநிதி அவர்கள் ஆணையிட்டுள்ளார். அ.தி.மு.க. இப்போதுதான் வேட்பாளரை அறிவித்தாலும் திமுகவுக்கு இணையாக அண்டை மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்களை வரவழைத்து தேர்தல் பணி செய்யும். பா.ம.க. வின் தலைவர் இராமதாஸ் அவர்கள் உட்பட அதன் அனைத்து எம்.எல்.ஏ களும் பென்னாகரம் தொகுதியின் எம்.எல்.ஏ P.N. பெரியண்ணன் மறைந்த சில நாட்களிலேயே தங்களது வேட்பாளரை அறிவித்து தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கிவிட்டனர். சென்ற இடைத்தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்துக்கு உபயோகித்த வாகனங்களின் எண்ணிக்கை 1000த்துக்கும் மேற்பட்டது என அணைத்து பத்திரிகைகளிலும் வெளியாயின.
பொதுக்கூட்டங்கள், பேரணி ஒலிபெருக்கியில் தொடர்ச்சியாக பாடல்கள், தலைவர்கள் வந்து செல்கையில் ஏற்படும் வாகன நெரிசல், 1 மாத தேர்தல் திருவிழாவில் தினமும் டாஸ்மாக்கில் சாராயம் குடித்துவிட்டு பொதுமக்கள் மாணவ-மாணவியருக்கு இடையூறு செய்யும் கட்சித் தொண்டர்கள் என இத்தனைக்கும் மத்தியில் எப்படி 8000 மாணவர்களால் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தமுடியும்?! தேர்தல் ஆணையம் ஏன் இதை கவனிக்கத் தவறியது?! மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு முன் தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினால் நன்றாக இருக்குமல்லவா? தேர்தல் ஆணையம் மறந்தாலும் பண்டிகைக்காக ஜனவரியில் நடக்கவிருந்த தேர்தலை ஒத்திவைக்க கோரிய கட்சிகள், 8000 மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைகொள்ளாதது ஏன்?
எம்.எல்.ஏ.க்களின் குடும்ப வாரிசுகளை தொகுதியின் வேட்பாளராக அறிவித்து ஜனநாயகத்தை உடனடியாக தூக்கிநிறுத்த பாடுபடும் கட்சிகளின் வேகம் வேடிக்கையாக இருக்கிறது. 'மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்துவிட்டு எந்த மக்களின் துயர்துடைக்க, தொகுதியில் வென்று புதிய சட்டமன்ற வளாகத்துக்கு நுழைய அவசரங்கொள்கிறீர்கள்?.
2009 டிச. 1ல் பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் P.N.பெரியண்ணன் உயிரிழந்தார். அன்றிலிருந்து 6 மாதத்துக்குள் அதாவது 2010 மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும் எனபது சட்டம். ஒரு தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ஒத்திவைக்க கோருவது பொருத்தமாக இருக்காது. அதனால் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மார்ச் 27 நடத்த திட்டமிட்டுள்ள பென்னாகரம் இடைத் தேர்தலை ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கடிதம் முலம் கோரிக்கையாக மக்கள் சக்தி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வராததால் சாமான்ய மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தை நாடியுள்ளோம் . மாணவர்களின் நலன் கருதி இந்த தேர்தல் ஒத்திவைப்பை அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு வலியுருத்தவும் மக்கள் சக்தி கட்சி வேண்டுகிறது.
"மக்களுக்காகத்தான் ஜனநாயகமே தவிர ஜனநாயகத்துக்காக மக்கள் அல்ல "
------------------------------------------------------------------------------------------------
இரண்டாவது அறிக்கை :
மாணவர்களை பாதிக்கும் தேர்தலைத் தள்ளி வைக்கும் வழக்கிற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தராதது ஏன்...?
கருத்து தெரிவிக்காதது ஏன் ...?
- மாணவர்களின் நலனில் அக்கறை உள்ளோர் இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி அரசிற்கு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்...
1. தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி பென்னாகரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுக்க இன்னும் மூன்று மாத கால அவகாசம் உள்ள நிலையில் தேர்வு நேரம் என்பதைக்கூட கருத்தில் கொள்ளாமல், மாநில அரசையும், அரசியல் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்காமல் மத்திய தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக இடைத்தேர்தலை அறிவித்திருப்பது ஏன் ?
2. வருடா வருடம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்காக பென்னாகரம் இடைத்தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட அரசியல் கட்சிகள், பென்னாகரத்திற்குட்பட்ட 8000 மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும் பொதுத்தேர்வுக்கு இந்த இடைத்தேர்தலால் இடையூறு ஏற்படும் என்பதை உணர்ந்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்க வேண்டாமா?
3. மாநில அரசாவது பென்னாகரம் தொகுதியிலுள்ள மாணவர்களின் நலன் கருதி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்க வேண்டாமா?
4. இந்த மாபெரும் ஜனநாயக நாட்டில் பாதிக்கப்படும் மாணவர்களின் நலன் கருதி, நீதி வேண்டி நீதிமன்றம் வந்தால் நீதிமன்றமோ தங்களால் ஏதும் செய்ய இயலாது என கைவிரித்தால் எங்கு சென்று முறையிடுவது என்பது தெரியவில்லை. மக்களாட்சியில் மக்களின் கருத்துக்கு மரியாதை இதுதானா?
5. நேற்று தருமபுரி மாவட்ட கலெக்டர் அவர்கள் அரசியல் கட்சிகளிடம் ' மாணவர்கள் மாலையில் படிக்கும்போது ஒலிபெருக்கிகளைக் கொண்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது' என தெரிவித்துள்ளார். ஒலிபெருக்கிகள் மூலம் மாணவர்களுக்கு நிச்சயம் தொந்தரவு ஏற்படும் என இந்த முக்கியமான நேரத்தில் கருத்து தெரிவித்துள்ளதுக்கு மக்கள் சக்தி கட்சி பாராட்டு தெரிவிக்கிறது. ஆனால் மாணவர்கள் மாலையில் மட்டும் படிக்க இது ஒன்றும் காலாண்டோ அல்லது அரையாண்டு தேர்வோ அல்ல. தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும், வாழ்க்கையில் ஒரே முறை வரும் பொதுத்தேர்வு. நான்கு, ஐந்து மணிநேர தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாக திரிந்துகொண்டிருப்பர் மாணவர்கள். தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்னும் துவங்காத இந்த காலகட்டத்திலேயே இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வன்முறையில் ஈடுபட்டதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ய கலெக்டர் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் மற்ற தேர்தல் விதிமுறைகளைப் போல் இதுவும் காற்றில் விடப்படும் என்பதே நிதர்சனம்.
6. மருத்துவம், பொறியியல் மட்டுமல்லாமல் அனைத்து மேற்படிப்பிற்கும் +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களே மிகவும் முக்கியமாகிறது. ண மதிப்பெண் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடம் முடிவு செய்யப்படும் போட்டி மிகுந்த சூழல் தற்போது உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்கும் 100 மாணவர்களில் 2 மாணவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்.( சென்ற ஆண்டில் 425 இடங்களைக் கொண்ட 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள் மொத்தம் 10 பேர் மட்டுமே!). நிலைமை இப்படி இருக்கையில், நடக்கவிருக்கும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம், சாராய சப்ளை, நடிகர்கள்-அமைச்சர்கள் வருகையால் போக்குவரத்து இடையூறு போன்றவற்றின் பாதிப்பால் அரசுப் பள்ளிகள் நிறைந்த பென்னாகரம் தொகுதியில் இருந்து பொறியியல்,மருத்துவப் படிப்பில் ஒருவருக்கு கூட இடம் கிடைக்காமல் போனால் அதற்கு அரசியல் கட்சிகள், மாநில அரசாங்கம், தேர்தல் ஆணையம் பொறுப்பேற்குமா..?
7. இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் இதுபற்றி எந்த வித கருத்தும் தெரிவிக்காமல், பொது நல வழக்கு தொடுப்போரின் முயற்சிக்கு ஆதரவும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த வியப்பையும் ஆழ்ந்த வருத்தத்தையும் தருகிறது
8. எங்களால் முடிந்த அளவு முயற்சித்து விட்டோம். நிதி வசதி இல்லாததால் மேல் முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் செல்ல இயலவில்லை. நாளை மனுத்தாக்கல் தொடங்க இருக்கிறது. ஆகவே, பென்னாகரம் தொகுதி மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமல்லாது தமிழகமெங்கும், உலகமெங்கும் இருக்கும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுநல ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம். "இடைத்தேர்தலை தள்ளிவைக்கக் கோரி தேர்தல் ஆணையம், மாநில முதலமைச்சர், மாநில பள்ளிக்கல்வி அமைச்சர், தர்மபுரி கலெக்டர் அவர்களுக்கு தந்தி, ஈ-மெயில்,பேக்ஸ் அனுப்ப வேண்டுகிறோம்". மக்களாட்சியில் மக்களே மன்னர்கள். மக்களின் ஒட்டுமொத்த குரலுக்கு எந்த அரசாங்கமும், நீதி அமைப்பும் தலைவணங்கித்தான் தீரவேண்டும். இன்னும் ஒருநாள்தான் உள்ளது. விரைந்து செயல்பட வேண்டுகிறோம்..
அனைவரின் தொடர்பு எண்கள், ஈமெயில் முகவரிகள்


